Wednesday 29 April 2015

வான் மெழுகு ஆய்வு - 1

வான் மெழுகு ஆய்வு
எம். அமிர்தலிங்கம் R.I.M.P
அமுது இதழில் “அகத்தியர் குழம்பு எனும் மருந்தைப் பற்றிய ஆராய்ச்சி வெளி வந்துள்ளதை கண்டோம் அது மிகப் பயன் உள்ள ஆராய்ச்சியாகும்
அது போலவே சித்த வைத்தியர்களிடையே மிகவும் விவாதத்திற்கு உரிய பெரிய மருந்துகளில் வான் மெழுகும் ஒன்றாகும் வான் மெழுகு பற்றிய பாட்டு இரண்டு பகுதியாக அமைந்துள்ளது. அது பற்றி பார்ப்போம்.
( அமுது சித்தவைத்திய ஆராய்ச்சி மாத இதழ் மலர் – 2 இதழ் – 3 – ஜூன்  1953 ல் வந்தது )
அ) வான் மெழுகு தயாரிப்பதற்கான அரைப்புச் சரக்காகிய நாத குரு தைலம் இதைப் பற்றிய பாட்டு இது முதற் பகுதி.
ஆ) வான் மெழுகு அரைப்பதற்கான கூட்டுச் சரக்கு விபரம், அரைப்பு முறை, தீரும் நோய்கள் அடங்கிய பாட்டுகள் இது இரண்டாம் பகுதி.
வான் மெழுகில் விவாதத்துக்கு உரியவை இரண்டாகும்
அ) நாத குரு தைலம்
ஆ) வான் மெழுகுக்கான சேர்க்கைச் சரக்குகளின் எண்ணிக்கையும் விவரமும்,
முதலில் நாத குரு தைலத்தைப் பற்றிய விவாதத்தை கவனிப்போம். நாத குரு தைலம் தயாரிப்பதற்கான கூட்டுச் சரக்குகளை நவ நீதம் விட்டு அரைத்து கலசத்தில் இட்டு குழித்தைலம், இறக்க வேண்டும் எனக் கூறுகிறது பாடல். இது நூல் ஆதாரத்தைக் கொண்டது. இதனால் கூட்டுச் சரக்குகளை பசு வெண்ணை விட்டு






அரைக்க வேண்டும் என்பது பெறப்படும்  நவ நீதம் என்ற வார்த்தைக்கு வெண்ணெய் என்ற பொருளன்றி வேறு பொருள் இருப்பதாக அறிகிலோம் சில வைத்தியர்கள் வெண்ணைக்கு பதிலாக முட்டையின் மஞ்சள் கரு தைலத்தை விட்டு கூட்டுச் சரக்குகளை அரைத்து குழித்தைலம் எடுக்க வேண்டும் எனக் கூறுகின்றனர். இதற்கு வான் மெழுகுக்கு முதல் நூலாகிய கல்லாடத்தில் நாதகுரு தைலத்தைப் பற்றிய பாட்டில் ஆதாரம் ஒன்றையும் காணோம்.
      வான் மெழுகைப் பற்றியும் அதன் அரைப்புச் சரக்காகிய நாத குரு தைலத்தைப் பற்றியும் கூறும் பாடல்களை ஈண்டு தருகிறோம். கல்லாட நூலாகிய வைத்திய கல்லாடத்தில் கூறியுள்ளபடி ( இந்நூல் யாக்கோபு இயற்றிய நூலென்று சிலர் கருதுகின்றனர். அக்கருத்துடன் இந்நூல் யாகோபு நூல் தொகுதியுள் அடக்கி அச்சிடப் பட்டுள்ளது
அ) --- பரை நாதம் பலம் பூதஞ்சுவை யதீதப்
பாங்கான வெடியுப்பு வினையேசேரு
கிரகசாரங் களஞ்சு செவியே வாங்கு
கிருபையுள்ள மால்தேவி கழஞ்சு மூன்று
திரசாதி சூரனுமாவ் வெடியே நட்சத்
திரங்கழஞ்சு நவநீதந் திக்குமாகும்
உரமான சரக்கதனை நவ நீதத்தோ
டுன்மையாய்க் கல்வமதில் மைபோலாட்டே
ஆ) --- உண்மையாயரைத்த பின்பு கலசத்திட்டு






உத்தமனே குழித்தைலம் வாங்கிக் கொள்ளு.
கன்னியாம் நாதகுரு தைலமாச்சு
கருவான தைலமிதற்கினையே தப்பா
பண்ணுகிற மருந்துவகைக் கெல்லாமாகும்
பண்பான இதிற் கொஞ்சமிட்டுப் பார்த்தால்
மண்ணில் வருங் குருமுப்பு இதற்க கொவ்வாது
மாநிலத்தோர் பிழைப்பதற்காய் விளம்புவேனே
பொருள் : பரை நாதம் – கெந்தகம், பலம் பூதம் – பலம் 5 , [ பூதம் – பஞ்ச பூதங்களைக் குறிக்கும் ] சுவையாதீதப் பாங்கான வெடியுப்பு – வெடியுப்பு – 2 பலம் [வினை, நல்வினை, தீவினை], கிரகசாரம் – நவச்சாரம் [கிரகங்கள் ஒன்பது] செவி – இரண்டு, மால்தேவி அரிதாரம் [விஷ்ணுவின் ஹரியின் மனைவி] திரசாதி சூரன் – வீரம், நட்சத்திரம் – பூரம், நவநீதம் – வெண்ணை திக்கு – எட்டு.
செய்பாகம் :- கெந்தகம் பலம் – 5 வெடியுப்பு பலம் – 2 நவச்சாரம் கழஞ்சு – 2 அரிதாரம் கழஞ்சு – 3 வீரம் கழஞ்சு - 3 பூரம் கழஞ்சு  -1பசுவின் வெண்ணை பலம் - 8  ஆகிய இந்த ஆறு சரக்குகளையும் கல்வத்திலிட்டு வெண்ணையைச் சேர்த்தரைத்துக் குழித்தைலம் வாங்கிய அந்தத் தைலமே நாத குரு தைலமாகும்
வான் மெழுகு –
அ) விந்து விந்து செந்தூர நாதமிகு
வீரமோடு சிவகாமியும்







வெள்ளை சிங்கிநட் சத்திரம் புகர்
வீறு மாண் குறியு மெட்டுபின்
தொந்தவாள முருகன் புராணமொடு
தூபதீப பரி சமனெடை
சுத்தியாவதிலை பாருபாரு பரி
சுத்தமானகலு வத்திலே
ஆ) சிந்தைகொண்டு பதினாறுமொன்றுபடச்
சேர்த்தரைத்து விடுதூளதாய்ச்
சீக்கிரத்திலிடு நாதமாமதனைச்
சேரு நாத குருதைலமே
முந்திவிட்டுமொரு சாமாம் நாலுமரை
முற்றுமே மெழுகுஉளுந்ததாய்
மோசமின்றி பனைவெல்லந்தன்னிலிடு
முறிவு பத்தியமுமில்லையே
இ) வது பாட்டு வான் மெழுகு சாப்பிடுவதால் தீரும்நோய் விவரங்களைப் பற்றியது.
அரும்பதவரை








விந்து – இரசம், விந்துசெந்தூரம் – இரசசெந்தூரம், நாதம் – கெந்தகம், சிவகாமி – கெளரி பாடனம், வெள்ளை – வெள்ளை - பாடனம், சிங்கி - மிருதார் சிங்கி, நட்சத்திரம் – பூரம், புகர் – வெள்ளி, வீறு ஆண்குறி – லிங்கம், எட்டுப் பின் – அபின், தொந்தவாளம் – நேர்வாளம், முருகன் புராணம் – காந்தம், தூபம் – சாம்பிராணி, தீபம் – சூடன், பரி – தங்கம்.
செய்பாகம் --- இரசம், இரசசெந்தூரம், கெந்தி, வீரம், கெளரி, வெள்ளை பாசானம், மிருதார்சிங்கி, பூரம், வெள்ளி, லிங்கம், அபின், நேர்வாளம், காந்தம், சாம்பிராணி, சூடன், தங்கம், ஆகிய சரக்குகள் 16 யும் சமநிடையாக வாங்கி சுத்தி செய்து முற் கூறிய நாத குருதைலத்தை விட்டு நான்கு சாமம் அரைத்து மெழுகு பதத்தில் எடுத்து உளுந்தளவு உருட்டி பனை வெல்லத்தில் கொடுக்க மூன்றாவது பாட்டில் கூறியுள்ளபடி சகல நோய்களும் தீரும். கரப்பான் பதார்த்தங்களை நீக்கவும். ஆனால் யோகிகளுக்கு பத்தியமில்லை.
குறிப்பு ; மேற்கண்ட பாட்டில் 16  மருந்துச் சரக்குகள் சேர்த்து கூறப்பட்டு உள்ளது. பின் வரும் பாட்டில் 14 மருந்துகள் மட்டுமே கூறப்பட்டு உள்ளது.என்பதைக் கவனிக்கவும். இது சில ஏட்டுப் பிரதிகளில் பாட்டு வித்தியாசம் காணப்படுகிறது என்ற குறிப்புடன் அச்சிடப்பட்டுள்ளது.
பாடல் –
விந்து விந்து செந்தூர நாதமொடு
வீரமான சிவகாமியும்
வெள்ளை சிங்கி நட்சத்திரம் புகர்
வீறு மாண்குறியு மெட்டுபின்
தொந்தமான முருகன் புராணமொடு
தூபதீப பரி சமனெடை







சுத்தி செய்து நீ பாரு பாரு பரி
சிந்தை கொண்டு பதினாலு மொன்றுபடச்
சேர்த்தரைத்தெடு தூளதாய்
சீக்கிரத்திலிடு நாதமாமதனைச்
சேரு நாத குருதைலமே
முந்திவிட்டு மொருசாமம் நாலுமரை
முற்றுமே மெழுகுளுந்ததாய்
மோசமின்றி பனை வெல்லந் தன்னிலிடு
முறிவு பத்தியமுமில்லையே
முன் பாட்டில் கூறப்பட்ட 16  சரக்குகளில் வீரம், வாளம் இரண்டும் நீக்கி மற்ற 14 சரக்குகள் சொல்லப் பட்டு உள்ளன.
      மற்றொரு ஏட்டுப் பிரதியில் உள்ள வான் மெழுகு முறை எங்கள் குடும்பத்தில் கையாளப்பட்டு வந்தது. அதிலும் 16 சரக்குகள் கூறப்பட்டு இருப்பினும் சரக்குகளில் வேறுபாடு காணப்படுகிறது. முதல் பாட்டில் கூறப்பட்ட வாளம் இல்லை அதில் கூறப்படாத தாரம் இதில் இருக்கிறது. அந்தப் பாட்டு வருமாறு  
விந்து விந்து செந்தூர நாத மொடு
வீரதார சிவகாமியும்
வெள்ளை சிங்கிநட் சத்திரம் புகர்







வீறு ஆண்குறியு மெட்டுபின்
தொந்தமான முருகன் புராண மொடு
தூபதீப பரிசம னெடை
சுத்தியாவதிலை பாரு பாரு பரி
சுத்தமான கழுவத்திலே
சிந்தை கொண்டு பதினாறு மொன்றுபடச்
சேர்த்தரைத்து விடுதூளதாய்
சீக்கிரத்திலிடு நாதமாமதனைச்
சேருநாத குருதைலமே
முந்தியிட்டு வொருசாம நாலுமரை
முற்றுமே மெலுகுளுந்ததாய்
மோசமின்றி பனைவெல்லம் மாசைபெற
ஓங்கு பத்தியமும் இல்லையே
முதலாவது வது பாட்டிலும் இப்பாட்டிலும் எண்ணிக்கையிலும் சரக்குகளிளும் வேற்றுமையுள்ளது. வீரமும் தாரமும் இந்தப் பாட்டில் இருப்பவை இரண்டாவது பாட்டில் இல்லை வைத்திய கல்லாடத்தில் வான் மெழுகு பாட்டிற்கு பதிப்பகக் குறிப்பு ஒன்று காணப்படுகிறது.








வீரமான சிவகாமியும் என்பதற்குப் பதிலாக வீரதார சிவகாமியும் என்றும் தொந்த வாள முருகன் புராணா மொடு என்பதிற்கு பதிலாக தொந்தமான முருகன் புராணமொடு என்றும் பாடபேதம் சில ஏட்டுப் பிரதிகளில் காணப்படுகிறது. என்பதே அக் குறிப்பாகும். இக் குறிப்பில் காட்டப் பட்டுள்ள பாட பேதமும் மூன்றாவது பாட்டும் ஒத்திருத்தல் நோக்கத்தக்கது.
      இந்த பாட்டையொட்டி “ நாத குறு தைலத்தைப் பற்றிய விவாதம் பாட்டாக இல்லாமல் உரை நடையில் இரகசியக் குறிப்பாக ஏட்டுப் பிரதியின் ஒரு மூலையில் காட்டப்பட்டிருந்தது. அது “நாத குருதைலத்தைப் பற்றிய பாட்டில் கடைச்சரக்கு விவரம் எடை விவரத்திற்கு ஒத்திருக்கிறது. அவைகளை அரைத்து சுத்தமான வெள்ளைச் சீலையில் முடிந்து கலசத்திலிட்டு குழித்தைலம் இறக்கிக் கொள்ளவேண்டும் என அந்தக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
      இந்த மூன்றாவது பாட்டைப் பற்றிய குறை ஒன்று உள்ளது. இந்தப் பாட்டு காணப்பட்ட ஏட்டுப் பிரதி தனிப்பட்ட ஏட்டுப் பிரதியல்ல. பல மருந்து முறைகள் அடங்கிய ஏட்டுப் பிரதியாகும்
இப்பொழுது சேர்க்கைச் சரக்குகளைப் பற்றி ஆராய்வோம். எந்த பாட்டிலும் பதினாறு சரக்குகளுக்கு அதிகமாகச் சொல்லப்படவில்லை. பதினான்கு சரக்குக்கு குறைவாகவும் சொல்லப்பட வில்லை. இதனால் பதினாறு சரக்குகளுக்கு குறைவாகவும் சொல்லப்படவில்லை. இதனால் பதினாறு சரக்கு கொண்ட மருந்தே சரியான தெனக் கொள்ளலாம். காரணம் கூறுவோம். இந்தகைய மருந்துகளில் பேதிச் சரக்காகிய வாளம் இடம் பெறுவது ஒரு சிறந்த அம்சமாகும். பதினான்கு சரக்குகள் கூறப்பட்ட பாட்டுக்களில் எதிலும் வாளத்தைப் பற்றிக் கூறப்படவில்லை, வாளம் இடம் பெற்றுள்ள வைத்திய கல்லாடப் பாட்டே சரியான பாட்டென நாம் கொள்வோம் அடுத்தபடியாக அரிதாரம் இடம் பெற வேண்டுமா என்பதைப் பற்றி சிந்த்ப்போம்.
      இதையும் வாளத்தையும் பதினான்கு சரக்குகளுடன் கூட்டினால் பதினாறு சரக்குகளாகின்றன.





ஆனால் பதினாலு சரக்குக்குள்ளே மேல சொல்லப்பட்ட பாட்டில் வீரமான சிவகாமியும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. தாரம் இதில் இடம் பெற வேண்டுமானால்  பாட்டின் அமைப்பு வீர தார சிவகாமியும் என்று அமைய வேண்டும் அப்படியானால் வாளமும் சேர்க்கப்படுவதால் தாரம் சேர்க்கப்படுவதால் ஏற்ப்படும் பாட்டின் அமைப்பு படி வீரமும் சேர்ந்த மொத்தம் பதினேழு சரக்குகளாகின்றன. இது சரியல்ல எப்படி ? எழுத்தாணியால் எழுதப்படும் ஏட்டுச் சுவடிப் பாட்டில் பதினாறு என்பது பதினாலு என்பதாகவோ அல்லது பதினாறு என்பதாகவோ மாறுபடக் காரணம் உண்டு. பதினேழாக மாறக் காரணம் இல்லை. பாட்டு ஆகையால் அதில் எண்கள் இட்டு எழுதுவதும் வழக்கம் அல்ல இதனால் பதினேழு சரக்காகக் கொள்வது ஏக காரணத்தைக் கொண்டும் பொருந்துவதல்ல எனவே கோழையகற்றிகளான வீரமும் கெளரியும் இருக்கையில் தாரத்தை நாம் தாராளமாக நீக்கிவிடலாம்.
      மற்று மொரு பாட்டு ஈண்டு கவனிக்கற்பாலது இது வான் மெழுகு என்ற தலைப்பில் உள்ளதல்ல. நூலாசிரியரும் வேறாகக் காணப்படுகிறார். மதுரை “வைத்தியமலர்” என்ற மாத வெளியீட்டிலும் வெளிவந்துள்ளது. அந்த மெழுகின் பெயர் “இந்துவர்ண மெழுகு” என்பதாகும் “அகத்தியர்” கரிசில் 151ள் சொல்லப்பட்டது. இதைப் பற்றி உயர் நிலைக் கலை என்னும் புத்தகத்தில் கூறியுள்ளபடி மேற்படி மாத வெளியீட்டில் பிரசுரித்திருந்தனர்.
அது வருமாறு –
விந்து விந்து செந்தூர நாதமிகு
வீரமோடு சிவகாமியும்
வெள்ளை, சிங்கிநட் சத்திரம்பகரு
வீறுமாண் குறியு மெட்டுபின்







தொந்தமான முருகன் புராணமரி
தூபதீபமது சமநிடை
சுத்தியாவதிலை பாருபாரு பரி
சுத்தமான கலுவத்திலே
சிந்தைகொண்டு பதினான்கு மொன்றுபட
சேர்த்தரைத்து விடுதூளதாய்
சீக்கிரத்திலிடு நாதமாமதனை
சேருநாத குருதைலமே
முந்தவிட்டு வரு நாலு சாமாமரை
போதுமா மெழுகுளுந்ததாய்
மோசமின்றி பனைவெல்ல மாசுபெற
வோங்கு பத்தியமில்லையே
இந்தப் பாட்டும் இதற்கு அடுத்து – தீரும் நோய் விவரம் சொல்லுகிற பாட்டும் கல்லாடர் நடையிலேயே உள்ளன. பின்னர் தொடர்ந்துள்ள மற்ற இரண்டு பாட்டுக்கள் வேறு போக்கில் உள்ளன. அவற்றில் சுத்தி உண்டா இல்லையா என்பதைப் பற்றியும் சில பத்திய முறைகளும் சொல்லப் பட்டிருகிறது.(இச்சாபத்தியம்)
      நாதகுரு தைலத்தைப் பற்றி தனியாக மேற்கண்ட மெழுகு சொல்லப் பட்ட நூலில் , பாட்டு எதுவும் உண்டா என்ற குறிப்பெதுவும் காணப்படவில்லை.







ஆனால் இந்து வர்ண மெழுகு பாட்டில் அமைந்துள்ள சீக்கிரத்திலிரு ” நாத மாமதனை “ என்ற வரியை விரிவுபடுத்தி நாத குரு தைலம் என்ன வென்று விளக்கப் பட்டு இருக்கிறது.
சீக்கிரத்தில், இது, நாதம், மா, மதன் என்று அவ்வரியைப் பிரித்து நாத குருதைலத்திற்கு விளக்கம் தந்துள்ளனர்.
சீக்கிரம் – வேகம், வேகம் என்பது வேகும் தன்மையுள்ள காரத்திற்கு பெயர் காரம் என்பது இங்கு கோழி முட்டையில் இரு – இருக்கின்ற, நாதம் மஞ்சள் கரு மா – பெருமைமிக்க , மதன் – பச்சைக் கற்பூரம் சேரு – (கோழி முட்டையின் நாதமாகிய மஞ்சள் கருவும், மகா குரு வென்னும் பெயரை உடைய பச்சக் கர்ப்பூரமும் ) கூட்டி தைலமாக்கிய “நாத குரு தைலம் என்று விளக்கப்பட்டுள்ளது. மேலும் வைத்திய கல்லாடத்தில் கூறப்பட்ட சரக்குகளுக்கும் இந்து வர்ண மெழுகின் கூட்டு சரக்குகளும் வேறு பாடு உள்ளது.
நட்ச்சத்திரம், புகர் என்பது வைத்திய கல்லாடம், நட்சத்திரம் – பகரு என்று கூறுகிறது. அகஸ்த்தியர் கரிசல் 151 ள் புகர் –வெள்ளி, பகரு – சொல்லப்படுகின்ற என்று பொருள் தரும் ஒரு சொல் எந்த மருந்துச் சரக்கையும் அது குறிக்கவில்லை.
“ தொந்தமான முருகன் புராணமரி (முருகன் புராணம் அரி) எனக் கூறுகிறது. அகஸ்தியர் கரிசல் 151 “ தொந்தமான முருகன் புரானமொடு என்பது வைத்திய கல்லாடப் பாட்டின் அடி, இதில் இருந்து இந்து வர்ண மெழுகில் காந்த மொடுஅரி என்னும் துருசும் சேர்க்கப்படுகிறது என்பது பெறப்படும். மேலும் சிவகாமி என்பது கெளரி, கெளரி என்பது அரிதாரத்திற்கும் பெயர் உண்டானதால் சிவகாமி என்பதற்கு கெளரி பாசனத்தை விட்டு அரிதாரம் என்று பொருள் கொள்ளப்படுகிறது அதுமட்டும் அல்ல பரி தங்கம் இப்பாட்டில் சொல்லப் படவில்லை வளத்தைப் பற்றிய குறிப்பும் இல்லை       







      எனவே வைத்திய கல்லாடத்தில் கூறப்பட்டதும் வாளம் உள்ளிட்ட 16 சரக்குகள் அடங்கியதுமான வான் மெழுகு முதல் பாட்டே நூலாதாரத்துடன் கூடிய சரியான பாட்டாக நாம் கொள்ளவேண்டும்
. இது வான் மெழுகு செய்வதற்கான கூட்டுச்சரக்குகளின் எண்ணிக்கையைப் பற்றிய விவாதத்தற்கு நாம் கூறுவது முடிவாகும். நாத குருதைலத்தைப் பற்றி தனியாகப் பாடல் வைத்திய கல்லாடத்தில் காணப்படுவதால் அந்த விவரப்படி தயாரிக்கப்பட்ட தைலத்தை நாத குருதைலமாகக் கொள்வதுதான் முறை அதைவிட்டு “வான் மெழுகு” பாட்டுடன் ஒரு அடியை விளக்கி முட்டையின் மஞ்சட்கரு தைலந்தான் என்று கூறுவது சரியென்று நமக்கு தோன்றவில்லை. நாதகுரு தைலத்திற்கு தனியாகப் பாட்டு இல்லாது இருக்குமானால் (முட்டையின் மஞ்சள் கருதான் நாத குருதைலம்  மென்ற கூற்றை ) சரி எனக் கொள்ளலாம்.
      சிலர் நாதகுரு தைலப் பாட்டை ஆதாரமாகக் கொள்ள மறுக்கின்றனர். இந்தப் பாட்டில் கெந்தி வீரம், பூரம் ஆகிய மூன்று சரக்குகளும் வருகின்றன. இந்த மூன்று சரக்குகளும் வான் மெழுகுக்குரிய பாட்டிலும் உள்ளன. இச்சரக்குகள் இருமுறை வருவதால் நாத குருதைலம் என்பது கல்லாடத்தில் உள்ள பாட்டில் கண்ட நாத குரு தைலமாக இருக்க முடியாது. வான் மெழுகுக்கு கூட்டும் சரக்குகளில் சிலவற்றைக் கொண்டு தைலம் இறக்குவதால் அத தைலத்திற்கு என்ன குணம் இருக்கப் போகிறது. என்பதே அவர்களுடைய வாதமாகும். மேலும் வெண்ணையை சூடு கண்டவுடன் உருகக் கூடியதாகலின் சரக்குகளின் சாரம் அதில் இறங்குமா? என்றும் அவர்கள் ஐயம் கேட்கின்றனர்.
      இத்தகைய ஐயம் வேண்டியதில்லை நாத குரு தைலத்துக்கான சரக்குகள் வெண்ணெய் சேர்த்து மைபோல் அரைக்கப்படுகிறது என்பதை இவர்கள் மறந்து விடுகின்றனர்.







நடை முறையில் இவர்கள் நினைப்பது போல் வெண்ணெய்யை மாத்திரம் விரைவில் உருகி மற்ற சரக்குகளின் சத்து தங்கிவிடுவதில்லை வெண்ணெய் மற்ற சரக்குகளின் சாரத்தையும் உடன் கொண்டே தைலமாக வெளிவருகிறது. வான் மெழுகு கூட்டுச் சரக்குகளில் உள்ள ஒன்றிரண்டு சரக்குகள் நாதகுரு தைலத்தில் சேர்ந்து இல்லாதால் மெழுகின் குணத்தை அதிகரிக்கச் செய்யுமே தவிர குணத்தை கெடுக்காது.

      வைத்திய கலாட முறையில் செய்யப்பட “வான் மெழுகு” தயாரில் உள்ளது வேண்டுவோர் எழுதிப் பெற்றுக் கொள்ளலாம். வான் மெழுகை உபயோகித்து அனுபவித்தவர்கள் தங்கள் அனுபவத்தை விபரமாக எழுதினால் மற்ற வைத்தியர்களும் பயன் அடையும் வண்ணம் அமுதுவில் வெளியிடப்படும். என்னென்ன நோய்களுக்கு கொடுக்கப்பட்டது. எந்த அளவில் அந்நோய்களில் வேலை செய்கிறது. எந்த நோய்களில் விசேசித்த பயனளிக்கிறது என்பன போன்ற விபரம் தேவை அன்பர்களே அடுத்து நாம் வேறொருவரின் கட்டுரையை அடுத்து பின்  பார்ப்போம்.