Thursday 19 February 2015

அகத்தியர் குழம்பு தொகுப்பு - 3

சித்த மருத்துவ ஆய்வுக்களம் –
அகத்தியர் குழம்பு – தொடர்ச்சி –
        அடுத்த படியாக இதே இரண்டு பாடல்களும் மற்ற ஏட்டுப் பிரதிகளிலும் உள்ளபடி கவனிப்போம். இன்னொரு வாசகம் பல ஏட்டுப் பிரதிகளுக்கும் அனுபோக வைத்திய என்ற புத்தகத்திற்கும் ஒத்தது.
அகத்தியர் குழம்பு –
பேசியமருந்து கேளாய் பெருங்காயம் கடுகு இந்துப்பு
வீசியரசம் பொற்காரம் விஷ மனோசிலையுங் கூட்டி
ஆசிலாத்திப்பிலியும் அதட்டிய தாரத்தோடு
மாசிலாக் கருஞ்சீரகம் வகைக்கு கழஞ்சுவாங்கே

வாங்கிய மருந்துக் கொக்க வாளமும் வருத்துப்பாதி
தாங்கிய பச்சைபாதி சமன் முளைதோடு போக்கி
தீங்கிலா மருந்து பத்தும் சேரவே அறைத்துக் கக்காந்து
ஓங்கிய மோரும்சாதம் உண்டுபின் அறைத்துக் கூட்டே

கூட்டிய மருந்தின் பேரு அகஸ்தியர் குழம்பதாகும்
இதில் சேரும் பத்து சரக்குகள் –
1.        காயம் 
2.        கடுகு
3.        இந்துப்பு
4.        ரசம்
5.        பொற்காராம்
6.        விடம்
7.        மனோசிலை
8.        திப்பிலி
9.        தாரம்
10.     கருஞ்சீரகம்
ஆக பத்தும் ஒவ்வொரு கழஞ்சு வாளம் – கழஞ்சு அதில் பாதி பச்சையாக் – கழஞ்சு, மீதி பாதி – கழஞ்சு வருத்தும் சேர்க்க என்பது பாட்டு அமைப்புக் கேற்ற பொருளாகும். விஷம் என்பது விஷ நாபி என்று பலர் பொருள் படுத்திகிறனர்.
குறிப்பு இது என் கருத்து --- பொற்காரம் என்பதை அடுத்து விஷமனோசிலை என்று வருவதால் மனோசிலை என்பது பாடனம் என்பதால் அதைக் குறிக்க விஷ மனோசிலை என்றும் குறிக்கலாம். மற்றும் தீங்கில்லா மருந்து பத்தும் என்று வளத்தை சொல்லிய பின்பே மருந்து பத்தும் என்பதால் மொத்த சரக்குகள் நாபி நீக்கிய பின் சரியாக வரும்.( கே. எஸ். )
இனி அடுத்த யூகி முனிவரின் கும்மி – 1000 – இதில் யூகி முனிவர் அகத்தியர் குழம்பு பர்ரியதைப் பார்ப்போம் ---
பேதிக் குழம்பதை  அகத்தீசர் நன்றாய்ப்
பேதமில்லாமலே சொல்லி வைத்தார்
போதினை கைப்பாகம்  சொல்லுகிறேன்
புதுமையாமடி  ஞானப் பெண்ணே
ஆனந்தமான  பெருங்காயத்தில்
அத்வைதமாகிய  ரோகிணியும்
தானந்த யிந்துப்பி  ரதமுடன்காரம்
தாரமனோசிலை  திப்பிலியும்
வானந்தமான  கருஞ்சீரகமுடன்
வாகாகசுக்கு  முடன்சேர்த்து
மோனந்தமாயிடை  ஒன்றுக்கு ஒன்றதாய்
முந்தியபச்சைய  தாய்நிறுத்து
நிறுத்தயிடைக்கிடைதான்  வாளங்கரி
நிச்சயமாகக்  கருக்கிக் கொண்டு 
கருத்தமுன்சரக்  கத்தனையும் போட்டு
காதலாயவின் மோர்  விட்டரைத்து
அறைக்கவாளத்தின்  பித்தமெடுபடும்
அன்பாக வாந்தியும்  பண்ணாது
நிறைத்தசாமமி  ரண்டுமேதானரை
நிச்சயமாகக்  கொடுக்கவுங்கேள்
யூகி முனி கைப்பாகம் ---
1.        காயம்
2.        கடுகுரோகினி
3.        இந்துப்பு
4.        ரசம்
5.        வெங்காரம்
6.        தாரம்
7.        மனோசிலை
8.        திப்பிலி
9.        கருஞ்சீரகம்
10.     சுக்கு
வகைக்கு ஒரு கழஞ்சு சமநிடை வாளம் 10 கழஞ்சு வறுத்துக் கருக்கி பசுவின் மோர்விட்டு ஒன்று சேர்த்து இரண்டு சாமம் அரைத்து எடுக்கவும்.
குறிப்பு – இதில் கவனிக்க வேண்டியது விசசரக்கு – விடநாபி- விடப்பட்டு உள்ளது. ஓமம் இதற்கு பதிலாக திப்பிலியும் சுக்கும் இவை இரண்டும் சேர்க்கப்பட்டு உள்ளது மற்றும் வாளம் அனைத்து வறுத்து சேர்க்கப் பட்டு இருக்கிறது.

                                                                                        ----- தொடரும்