Saturday 18 October 2014

அகத்தியர் குழம்பு - தொகுப்பு -2

சித்த மருத்துவ ஆய்வுக்களம் –






















அகத்தியர் குழம்பு – தொடர்ச்சி –
        அடுத்த படியாக இதே இரண்டு பாடல்களும் மற்ற ஏட்டுப் பிரதிகளிலும் உள்ளபடி கவனிப்போம். இன்னொரு வாசகம் பல ஏட்டுப் பிரதிகளுக்கும் அனுபோக வைத்திய என்ற புத்தகத்திற்கும் ஒத்தது.
அகத்தியர் குழம்பு –
பேசியமருந்து கேளாய் பெருங்காயம் கடுகு இந்துப்பு
வீசியரசம் பொற்காரம் விஷ மனோசிலையுங் கூட்டி
ஆசிலாத்திப்பிலியும் அதட்டிய தாரத்தோடு
மாசிலாக் கருஞ்சீரகம் வகைக்கு கழஞ்சுவாங்கே

வாங்கிய மருந்துக் கொக்க வாளமும் வருத்துப்பாதி
தாங்கிய பச்சைபாதி சமன் முளைதோடு போக்கி
தீங்கிலா மருந்து பத்தும் சேரவே அறைத்துக் கக்காந்து
ஓங்கிய மோரும்சாதம் உண்டுபின் அறைத்துக் கூட்டே

கூட்டிய மருந்தின் பேரு அகஸ்தியர் குழம்பதாகும்
இதில் சேரும் பத்து சரக்குகள் –
1.        காயம் 
2.        கடுகு
3.        இந்துப்பு
4.        ரசம்
5.        பொற்காராம்
6.        விடம்
7.        மனோசிலை
8.        திப்பிலி
9.        தாரம்
10.     கருஞ்சீரகம்
ஆக பத்தும் ஒவ்வொரு கழஞ்சு வாளம் – கழஞ்சு அதில் பாதி பச்சையாக் – கழஞ்சு, மீதி பாதி – கழஞ்சு வருத்தும் சேர்க்க என்பது பாட்டு அமைப்புக் கேற்ற பொருளாகும். விஷம் என்பது விஷ நாபி என்று பலர் பொருள் படுத்திகிறனர்.
குறிப்பு இது என் கருத்து --- பொற்காரம் என்பதை அடுத்து விஷமனோசிலை என்று வருவதால் மனோசிலை என்பது பாடனம் என்பதால் அதைக் குறிக்க விஷ மனோசிலை என்றும் குறிக்கலாம். மற்றும் தீங்கில்லா மருந்து பத்தும் என்று வளத்தை சொல்லிய பின்பே மருந்து பத்தும் என்பதால் மொத்த சரக்குகள் நாபி நீக்கிய பின் சரியாக வரும்.( கே. எஸ். )
இனி அடுத்த யூகி முனிவரின் கும்மி – 1000 – இதில் யூகி முனிவர் அகத்தியர் குழம்பு பர்ரியதைப் பார்ப்போம் ---
பேதிக் குழம்பதை  அகத்தீசர் நன்றாய்ப்
பேதமில்லாமலே சொல்லி வைத்தார்
போதினை கைப்பாகம்  சொல்லுகிறேன்
புதுமையாமடி  ஞானப் பெண்ணே
ஆனந்தமான  பெருங்காயத்தில்
அத்வைதமாகிய  ரோகிணியும்
தானந்த யிந்துப்பி  ரதமுடன்காரம்
தாரமனோசிலை  திப்பிலியும்
வானந்தமான  கருஞ்சீரகமுடன்
வாகாகசுக்கு  முடன்சேர்த்து
மோனந்தமாயிடை  ஒன்றுக்கு ஒன்றதாய்
முந்தியபச்சைய  தாய்நிறுத்து
நிறுத்தயிடைக்கிடைதான்  வாளங்கரி
நிச்சயமாகக்  கருக்கிக் கொண்டு 
கருத்தமுன்சரக்  கத்தனையும் போட்டு
காதலாயவின் மோர்  விட்டரைத்து
அறைக்கவாளத்தின்  பித்தமெடுபடும்
அன்பாக வாந்தியும்  பண்ணாது
நிறைத்தசாமமி  ரண்டுமேதானரை
நிச்சயமாகக்  கொடுக்கவுங்கேள்
யூகி முனி கைப்பாகம் ---
1.        காயம்
2.        கடுகுரோகினி
3.        இந்துப்பு
4.        ரசம்
5.        வெங்காரம்
6.        தாரம்
7.        மனோசிலை
8.        திப்பிலி
9.        கருஞ்சீரகம்
10.     சுக்கு
வகைக்கு ஒரு கழஞ்சு சமநிடை வாளம் 10 கழஞ்சு வறுத்துக் கருக்கி பசுவின் மோர்விட்டு ஒன்று சேர்த்து இரண்டு சாமம் அரைத்து எடுக்கவும்.
குறிப்பு – இதில் கவனிக்க வேண்டியது விசசரக்கு – விடநாபி- விடப்பட்டு உள்ளது. ஓமம் இதற்கு பதிலாக திப்பிலியும் சுக்கும் இவை இரண்டும் சேர்க்கப்பட்டு உள்ளது மற்றும் வாளம் அனைத்து வறுத்து சேர்க்கப் பட்டு இருக்கிறது.

                                                                                        ----- தொடரும்  

Friday 3 October 2014

அகத்தியர் குழம்பு தொகுப்பு - 1

    

சித்த மருத்துவ ஆய்வுக் களம்












அன்பர்களுக்கு நான் புதிதாக தொடங்கியிருக்கும் இப்பகுதி சித்த மருத்துவ ஆய்வுக்களமாகும் இதில் சித்த மருத்துவ நூல்களில் மற்றும் அனுபவ முறைகளிலும் மருந்துகளின் நன்மை தீமைகள் நூல்களில் மருந்துச் சரக்குகள் பற்றிய ஒன்றுக்கொன்று மாறுபாடுகள் அதில் ஏது சரியானது சித்த மருத்துவத்தின் அடிப்படை என்ன என்பது பற்றி எல்லாம் எழுதப்படும் இதில் பாரவையாளர்கள் தாங்கள் அனுபவங்களையும் பதிவு செய்து உண்மை நிலையை அறிய உதவும்.
அகஸ்தியர் குளம்பு – இது சித்த மருத்துவத்தில் ஒரு முக்கியமான மருந்து இது பற்றிய ஒரு ஆய்வு அமுது என்ற சித்த மருத்துவ மாத இதழில் வந்த தொகுப்பினை இதில் வெளியிடுகிறேன் இதில் இருந்து பார்ப்போம் இந்த அமுது இதழ் தாசர்புரம் சித்த ஆராய்ச்சிக் கழகத்தினதும், மற்றும் தென் இந்திய சித்த வைத்திய சங்கங்களின் ஆதரவு பெற்று கெச். தேவதாஸ் , மற்றும் ஜி. கந்தசாமி ராஜூ அவர்களால் 1953 – ஜனவரியில் தொடங்கி நடத்தப்பட்டதாகும் இனி அகஸ்தியர் குளம்பு பற்றிப் பார்ப்போம்.
அகஸ்தியர் குழம்பு – இது அகத்தியர் பெயரால் வழங்கப்படும் ஒரு மருந்தாகும். இது பற்றி எஸ்.எஸ். ஒய். பிரமானந்தா எழுதிய கட்டுரைத் தொடர் ---
வியாதியஸ்தர் அருவருக்கும் படியாகவோ மனம் குமட்டும் படியாகவோ இம்மருந்தைக் கொடுத்தால் வியாதி பூரணமாக, குணமடையாது. மருந்துகள் சரியாக வேலை செய்யாது. இவ்விஷயம் அவசரமான கட்டங்களில் அதிகம் உபயோகப்படுகிறது.
இம் மருந்தை கட்டிகளின் மேலும் ரணங்களிலும் வெளிப்பிரயோகம் செய்வதால் அதிகவேதனை உண்டுபண்ணுகிறது. கட்டிகள் பழுத்து உடைந்திருக்கின்றன. ரணங்கள் நீரைக் கக்கி சொஸ்தம் அடைகின்றன வேதனை தாங்க முடியாதவர்களுக்கு வெளிப் பிரயோகம் செய்தால், அவர்கள் புத்தி தடுமாறிப் போகிறது. இராஜ பிளவு,கண்டமாலை, அரையாப்புக் கட்டிகள், நிணநீர்க் கட்டிகள் மற்றுமுள்ள எல்லா கட்டிகளுக்கும் ஆயுதங்கள் இல்லாமலே ரண சிகிச்சை செய்வதற்கு இம் மொழுகை மேலே அதிகமாகப் பூசலாம். வேதனை உண்டாகும் பொழுதெல்லாம் சத்துள்ள மயக்க பானங்கள் கொடுக்கவேண்டும். சித்த ஆஸ்பத்திரிக்கு இது போன்ற மருந்துதுகளும் உள் மருந்துகளும் அவசியம் வேண்டும்.
வியாதிகள் அனுபவ அனுப்பானங்கள்
1.        சுரங்கள் 64 க்கும் - பொது, சுக்கு கியாழம்.
2.        கபசுரம், - துளசி, கண்டங்கத்திரிக்காய், கடுக்காய், இவை மூன்றில் ஏதாவது ஒன்றில் கியாழம் செய்து கொடுக்கவேண்டும்.
3.        விட்டு விட்டு வரும் சுரம் குளிர் காய்ச்சல் - வேப்பம் பட்டைக் கஷாயத்தில் கொடுக்க வேண்டும்.
4.        நாவறட்சி, ஈரப்பசையே இல்லாமை - வெந்நீரில் குலைத்துக் நாக்கில் தடவேண்டும்.
5.        சன்னிகள் - இஞ்சி ரசம், தேன் அமுர்தப்பால், மூன்றும் கலந்த சுரசத்தில்,
6.        மாரடைப்பு - வெள்ளுள்ளி, இஞ்சி, முருங்கைப் பட்டை மூன்றும் சேர்த்த ரசத்தில் கொடுக்கவேண்டும்.
7.        மாந்தம், வாயு, குண்மம் - வெள்ளை மிளகுக் கஷாயத்தில் கொடுக்க வேண்டும்.
8.        பல் கட்டி, வாய் திறக்க முடியாமை, கைச்சாடை - ( நாசிகா பானம் செய்து திறக்காவிட்டால் ) மெழுகை துணியில் தடவி திரித்து வேப்பென்னையில் னைத்து தீக் கொளுத்தி புகை பிடிக்க வாய் திறக்கும் உள்ளுக்கு கடுகுப் பிரமாணம் வெந்நீரில் கொடுக்கலாம்
9.        தேள் கொட்டினால் வியர்வை, நடுக்கம் - கைகால்கள் ஐஸ் போல் ஆனாலும் வேறு விஷ கதியாய் இருந்தாலும் மெழுகை கொட்டுவாயில் தடவி ஓட்டைச் சுடவைத்து ஒத்தனம் செய்யவும் வேப்பென்னையில் உள்ளுக்கு கொடுக்கவும். ஒரு மணி நேரத்தில் குணம் ஏற்ப்படும்.
10.     மண்டையில் ஜல தோஷத்துக்கு - மூக்கில் புகை பிடிக்கவும் முன் போல் செய்து.
11.     விசங்கள் - எதனாலும், ஆணுக்கு பெண் மூத்திரத்திலும், பெண்ணுக்கு ஆண் மூத்திரத்திலும் கொடுக்க வெளிப் பிரயோகமும் முன் சொன்னபடி கலந்து தடவவும்.
12.     குழவிகள் ( குழந்தைகள் ) பால் திரட்ச்சிக்கு - இதனால் ஏற்ப்பட்ட எல்லாக் கோளாறுகள் சன்னிக்கும் வெந்நீரில் தர வேண்டும்.
13.     கண்டமாலைக்கு - வாரத்திற்கு ஒரு முறை சக்திக்கு தக்கபடி பேதிக்குக் கொடுத்தல்.
14.     பெண்கள் சூதகம் சரியாக ஆகாமை, கட்டியதால், கிருமி, ரணம் - இதனால் ஏற்படும், வயிற்றுவலி,வாயு மாறும் உள்ள எல்லா அவயவ அங்கக் கோளாறுகளுக்கும் வேப்பெண்ணை அல்லது தேன் இவைகளில் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை கொடுத்தல் வேண்டும்.
15.     சுவாச காசத்திர்க்கு - பிரமாணம் நெய்யில் ஒரு நாளைக்கு ஒரு வேலை ஒரு நாள் விட்டு ஒரு நாள் கொடுக்கலாம். ஒருவருக்கு ஒரு மாதம் வரைக் கொடுத்து இருக்கிறேன்.
16.     பவுந்திரம் ஓட்டைகள், மூலம் போன்ற கட்டிகள் - மேற்படி மாதிரி இரண்டு மாதம் கொடுத்து இருக்கிறேன்.
17.     பொது எல்லா வியாதிகளிலும் எல்லாக் கட்டங்களிலும் எல்லா வேலைகளிலும் மலஜலம் அடை பட்டிருந்ததாகத் தெரிந்தால் வயதின் அளவு பலத்தினளவு, வியாதியின் அளவு, இவற்றிற்கு கொடுக்கவேண்டிய மெழுகின் அளவு பொருத்தமான அனுப்பானம் இவைகளை எல்லாம் தெரிந்து கொடுத்து அகஸ்தியர் குழம்பு சம்மந்தப் பட்ட அநேக வியாதிகளை குனமாக்கியுள்ளேன்.
18.     இத்துடன் தாம்பர, வங்கம், பாஷனம், அன்னபேதி போன்ற மருந்துகளையும் மாற்றி மாற்றிக் கொடுத்து சாயம், பவுந்திரம், சுவாசகாசம் போன்ற கை விடும் படியான கேசுகளும் பார்த்துள்ளேன்.
அகஸ்தியர் குழம்பு சம்மந்தப்பட்ட வியாதிகளும் அனுப்பானங்களும் அனுபவம் உள்ளவைகளை மாத்திரம் எழுதியுள்ளேன்.
                                                                                                                                                               ------ S.S.Y. Brahmanandha 
குறிப்பு – இம்மருந்து பற்றி மேற்கண்ட அமுது பத்திரிகையில் 1953 ல் வெளியான பிப்பரவரி மலர் -1 இதழ் -11 ல் பிரமானந்த அவர்கள் மேற்கண்ட மருந்தை தான் கொடுத்து அனுபவித்த விபரங்களை வெளியிட்டு உள்ளார். இனி இப் பத்திரிகை ஆசிரியரின்  வேண்டு கோளுக்கு இணங்க இம் மருந்து பற்றிய பிறரின் அனுபவம் மற்றும் ஆய்வுக் கருத்துக்கள் தொடரும் இது  சித்த மருத்துவம் பற்றிய சிலரின் தவறான கண்ணோட்டங்கள், மற்றும் அதன் உண்மை நிலை பற்றி அறிய உதவும் என்று நம் புகிறேன். விரைவில் இது போன்ற பழைய பத்திரிகைகளை pdf  ஆக மாற்றி வெளியிட உத்தேசித்து உள்ளேன் வணக்கம் கே.எஸ். கந்தசாமி.
அகஸ்தியர் குழம்பில் சேர்க்கப்படும் பச்சைபாதி } ----
        இதைக் கையாளும் சித்த வைத்தியர்கள் ஒவ்வொருவரும் தங்களின் நூல் ஆராய்ச்சிகளுக்கும் அனுபவத்திற்கும் தகுந்த மாதிரியே “ பச்சை பாதி “ என்ற சரக்கைச் சேர்த்து கொள்கிறார்கள்.நாம் அறிந்தவரையில் ஆமானக்கு முத்துப் பருப்பையே பெரும் பாலான வைத்தியர்கள் சேர்ப்பதாக தெரிகிறது. இவ்விதம் செய்யப்படும் குழம்பு நூலில் காணப்படும் அனுப்பானங்களுக்கு பெரும்பாலும் ஒத்து அந்தந்த ரோகங்களை நிவர்த்தி செய்து வருகிறது. இதில் மிக்க அனுபவத்தைக் கண்ட எஸ். எஸ். ஒய். பிரமானந்தா அவர்கள் தெரிவித்த விபரத்தை அமுது இதழ் 11 – பக்கம் 168 –ல் பார்க்கலாம் ( இது முன்பு உள்ள பாராவில் உள்ளது )
        மேலும் சித்தவைத்திய பரம்பரையைச் சேர்ந்த சித்த வைத்தியர்கள் ஒருவர் “ பச்சைபதி ” என்பது பூநீர் விளையும் இடங்களிலும் உப்பு விளைந்த பாத்திகளை அழிக்காமல் விடப்பட்டவைகளிலும் கரும்பச்சை நிறமாக விளைந்து கிடக்கும் ஓர்வகை உப்பை எடுத்து அதை துணியில் தளர முடித்து தண்ணீரில் மூன்று, நான்கு தடவைகள் நன்றாக அலசி வெய்யிலில் காயவைத்து பின் அகஸ்த்தியர் குழம்பில் சேரும் வாளத்தின் இடையில் பாதி சேர்த்து அரைப்பது எனவும் அதுவும் நல்ல மாதிரியில் வேலை செய்வதாகவும் சொல்கிறார். ஆகவே சித்த மருந்துகளின் ஆராய்ச்சியில் ஊக்கம் கொண்ட வைத்தியர்கள் மேலே கண்ட பச்சை நிற உப்பை சேர்த்து தயாரித்து பரீட்சித்துப் பார்க்கும் படியும் அதனால் ஏற்பட்ட பலா பலன்களை நமக்கு தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
        நிற்க நூல் முறைகளாக நாம் ஆராய்ச்சி செய்வோமானால், யூகிமுனிவர் கும்மி பக்கம் – 46  செய்யுள் - 302  – ல் குழம்பின் சரக்குகளைச் சொல்லி “ மோனந்த மாயிடை ஒன்றுக்கு ஒன்றதே முந்திய பச்சையதாய் நிறுத்து “ என்று காணப்படுவதால் குழம்பில் சேர்க்கப்படும் மருந்துகளை அப்படியே பச்சையாகவும், வாளத்தை வருத்தும் சேர்க்க வேண்டிய தெனவும் இடம் கொள்ள ஏற்படுகிறது.
        வைத்திய சாராசங்கிரகம் பக்கம் 440  ல் அகஸ்தியர் குழம்பு என்ற தலைப்பில் இச் சரக்குகளுடன் “ சுத்தி செய்த வாளப்பருப்பு வரகநிடை 10 காட்டாமணக்கு முத்து பருப்பு வராகநிடை 5 ம் என்றும் காணப்படுகிறது. இதை அனுசரித்து நம்மில் சிலர் காட்டாமனக்குகின் முத்துப் பருப்பையும், பலர் ஆமணக்கு முத்துப் பருப்பையும். சேர்த்து அரைத்து உப யோகித்து வருகிறார்கள்.
        சித்த வைத்தியத் திரட்டு பக்கம் 146 ல் செய்யுள் 3 ல் “ வாளமும் வறுத்துப் பாதி தாங்கிய பச்சை பாதி சமன் முளை போக்கி நீயும் “ என்ற தெளிவாகக் காணப்படுகிறது. ஆகவே மேற்கண்ட ஆராய்ச்சிகளில் இருந்து குழம்பில் சேர்க்கப்படும் பச்சை பாதி என்பது முளை நீக்கிய வாளம் என்றும் பொருள் படலாம்.
குறிப்பு --- அகத்தியர் குழம்பில் சேர்க்கப்படும் சரக்குகளே வித்தியாசப் படுவதால் இதை முடிவாக சித்த ஆராய்ச்சிக் கழகத்தாலும் அதைச் சேர்ந்த பார்மசியிலும் செய்முறை இவற்றை தெளிவாகவும் விரிவாகவும் vol.2. No. 1 . அதாவது அடுத்த இதழில் வெளியாக்கப்படும் : அமுது ஆசிரியர்.
அகத்தியர் குழம்பு தொடர்ச்சி ------- [ அமுது – மலர் – 2 ஏப்பரல் – 1953  இதழ் - 3 ]
        சித்தவைத்தியப் பழக்கத்தில் பலரால் உபயோகப் படுத்தப்பட்டு வரும் உயரிய சித்த மருந்துகளில் இது முக்கியமான ஒன்றாகும். அதே காரணத்தால் தான் பற்பல இடங்களில் பல மரபினராகிய சித்த வைத்தியர்கள் சிற்சில வேறுபாடுகளுடன் இதை உபயோகித்து வருகின்றனர். தென் இந்தியாவிலிருந்து வந்த பற்பல அதிக அனுபவம் பெற்ற சித்தவைத்தியர் களுடைய கடிதங்களில் இருந்தே இதை தெற்றென அறிந்து கொள்ளலாம். அது மாத்திரமல்ல சித்த வைத்திய நூல்களிலும் ஏடுகளிலும் இதே போன்ற வித்தியாசங்கள் பல புகுத்தப் பட்டிருகிறது. மூன்றாவதாக, நமது நாட்டு சித்த வைத்தியர் பலருக்குள்ளே, ஒரு தாழ்ந்த மனப்பான்மை உண்டு. அதாவது, தாங்கள் செய்துவரும் முறை, கைப்பழக்கம் முதலியவைதான் மேலானாவை மற்றவை மிகத் தவறு என்று என்னும் எண்ணம். இந்த எண்ணம் இன்னும் அநேகரிடத்தில் இருந்துவருவதால், பல விஷயங்களை ஆராய்ந்து பலர் முறைகளை ஆராய்ச்சி செய்து பொது நிலைமையில் நின்று இதுதான் நன்று என்று தைரியமாய் சொல்ல முன் வரமாட்டார்கள். இன்னும் மொன்று தாங்கள் தாங்கள் அனுபவத்தில் இருந்துவரும் சிற்சில அற்ப வித்தியாசங்களைக் கூட மற்ற வைத்தியர்கள் அறியும்படி வாய்விட்டுச் சொலவும் மனம் வருவது இல்லை. மேற்கூறிய மனப்பான்மை அறவே ஒழியவேண்டும். இவ்விதமான மனப்பான்மை நிங்கிய சிலர் கூடி பல முறை ஆராய்ச்சி செய்ததின் முடிவுகளை இதன் கீழ் தருகிறோம். -----
முதலாவதாக --- சித்தவைத்தியத் திரட்டு  என்ற நூல், G.C.I.M, L.I.M. முதலிய சித்த வைத்திய கல்லுரி மாணவர் வகுப்புகளுக்கு பாடப்புத்தகமாய் அமைந்து உள்ளது :            
இது தரும் பாடல் –
அகத்தியர் குழம்பு [ செய்யுள் 2, 3. ]  
பேசிய மருந்து கேளாய் பெருங்க்காயங் கடுகிந்துப்பு
வீசியரசம் வெங்காரம் விடமனோ சிலையுமோமம்
ஆசிலா வரிதாரத்தொ டருங்கருஞ்சீர கந்தான்
மாசிலா மருந்து பத்தும் வகை வகை கழஞ்சு வாங்கே

வாங்கிய கழஞ்சுக்கோப்பை வாளமும் வறுத்துப்பாதி
தாங்கிபச்சைபாதி சமன் முளை போக்கிநீயும்
தீங்கில்லா மருந்து பத்துஞ் சேர்த்துமே யாரைக்கக் காந்து
ஓங்கிய மோருஞ்சோறு முண்டுபினரைத்துக் கூட்டே
} – இதற்கு அடுத்த 4 --------- 14  பாட்டுக்கள் அனுப்பானத்தைப் பற்றியது.
இதில் சேரும் பத்து மருந்துகள் வருமாறு
1.        பெருங்காயம்
2.        கடுகு ரோகினி
3.        இந்துப்பு
4.        ரசம்
5.        வெங்காரம்
6.        விடம் ( நாபி )
7.        மனோசிலை
8.        ஓமம்
9.        அரிதாரம்
10.     கருஞ்சீரகம்
இந்த பத்து மருந்துகளும் வகைக்கு ஒரு கழஞ்சு வீதம் பத்துக் கழஞ்சு ( 1- கழஞ்சு -  4 gm  ) இதற்கு சம அளவு – 10  கழஞ்சு வாளம் – அதில் – 5  கழஞ்சு – பச்சையாக முளை போக்கி சேர்க்கவும் என்பது சிலர் அனுபவம். ஆக பத்து மருந்தும், சமன் வாளமும் சேர்த்து – 11 சரக்கு ஆகும்.
குறிப்பு – பச்சை பாதி என்பது தனிச் சரக்கு என்று சொல்வாரும் உண்டு. அதாவது ஒருவித பச்சை நிறமுள்ள உப்பு – அது பூநீர் விளையும் இடங்களில் விளையும் ஒருவித உப்பு என்பர். இது தவரானது என்பது – இரண்டு காரணங்களால் தெளிவாகும் --  ஒன்று பச்சை பாதி என்பது தனிச்சரக்காய் இருந்தால், மூன்றாவது பாடலிலும் நான்காவது பாடலிலும் சரக்கு பத்து என்று இருமுறை குறிப்பிட்டு இருப்பது தவறாகும் ஆகவே பச்சை பாதி என்பது தனிச்சரக்கு அல்ல. இரண்டாவதாக பச்சை பாதி என்பது தனிச்சரக்கு ஆனால் அந்தப் பச்சை உப்பு என்பது – 5 கழஞ்சு சேர்க்க வேண்டும். பூநீர் சம்ந்தப்பட்ட உப்பு – 10  கழஞ்சு  மருந்துக்கு – 5 கழஞ்சு சேர்ப்பது அபரிமிதமான அளவு ஆகும். அப்படி செய்த குழம்பை மருந்தாக உபயோகிப்பது பெருந்தவராகும்.
        நிற்க, இன்னும் சிலர் பச்சை பாதி என்பதற்கு சில விபரிதமான அறுத்தம் கூறுவதுண்டு. அதாவது 10 – ல் - 5 – மருந்துகளை சுத்தம் செய்யாமால் பச்சையாகவே உபயோகிக்க வேண்டும் என்பதாம். இப்படி சொல்லுவது அகத்தியர் பெருமைக்கே குறைவை உண்டாக்குவதாகும் கடுகு, காயம், ஓமம், கருஞ்சீரகம், விடம்- இவற்றை வறுத்துப் பொடித்தும் மற்றவைகளை சுத்தம் செய்யாமல் சேர்த்துக் கொள்ளுவதும் என்பது சித்த மருத்துவ நூல்களுக்கு ஒவ்வாது. பாஷாசன சரக்குகளை சுத்தம் செய்யாமல் மருந்துகளில் சேர்த்து வழங்கும் சிலராலேயே சித்த வைத்தியத்திற்கு இருக்க வேண்டிய நன்மதிப்பு குறைந்ததற்கு முக்கியமான காரண மென்று நாம் எண்ணுகிறோம். நிற்க 4 – வது பாட்டில் வாளமும் என்ற பதத்திற்குப் பின் முளை போக்கி என்ற இரு பதங்களுக்கும் இடையே வறுத்துப் பாதி, பச்சை பாதி என்று சொல்லப்பட்டு இருப்பதால் இவ்விரண்டு பாதிகளும் வாளத்தையே குறிக்கும் என்பதில் சந்தேகம் இருக்க வேண்டியது இல்லை.
         ஆகவே மேற்கூறிய காரணங்களால் இவ்விரண்டு பாடல்களை ஆதாரமாகக் கொண்டு அகத்தியர் குழம்பு செய்யும் முறை பின் வருமாறு 
1.        பெருங்காயம்
2.        கடுகு
3.        இந்துப்பு
4.        ரசம்
5.        வெங்காரம்
6.        விடம்
7.        மனோசிலை
8.        ஓமம்
9.        அரிதாரம்
10.     கருஞ்சீரகம்
ஆக பத்து சரக்குகளையும் ஒவ்வொன்றையும் தனியாக சித்த வைத்திய முறைப்படி சுத்தி செய்து அதே அளவு வாளம் எடுத்து சுத்தி செய்து அதில் பாதி பச்சையாகவும் பாதி வருத்தும் சேர்த்து அரைத்து மெழுகாக்கிக் கொள்ளவும் இதில் விடம் என்பதை விசநாபி என்றும் சிலர் அருத்தம் கொள்கின்றனர்.

                                                                  ----- தொடர்ச்சி அடுத்துப் பார்ப்போம்